ராஜஸ்தான் - பெங்களூரு இன்று பலப்பரீட்சை
ராஜஸ்தான் - பெங்களூரு இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதன்கிழமை நடைபெறவுள்ள வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த சுற்றில் தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும் என்பதால், இரு அணிகளும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றன.
கடைசி நேரத்தில் கேப்டன் பொறுப்பை சக நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்திடம் ஒப்படைத்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வாட்சன், கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கிய தனது கடைசி லீக் ஆட்டத்தில் 104 ரன்கள் விளாச, நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை வீழ்த்தி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்.
2008-இல் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் அணியில் வாட்சன் மட்டுமல்லாது, இதுவரையிலும் 13 ஆட்டங்களில் 498 ரன்கள் குவித்துள்ள ரஹானே சிறந்த தொடக்கம் ஏற்படுத்தித் தருகிறார். ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் ஆகியோரும் பேட்டிங்கில் அசத்தி வருவது அணிக்குப் பலம்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் ஃபாக்னர் தனது பணியை கச்சிதமாக செய்தால், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் மோரிஸ் தலைமையில் பந்துவீச்சும் பலப்படும். இவர்களுடன் தவல் குல்கர்னி, கருண் நாயர் ஆகியோரும் தங்கள் பணியை சரியாக கவனிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானும், பெங்களூரும் சம அளவில் புள்ளிகளைப் பெற்றிருந்தபோதிலும், ரன் ரேட்டில் பெங்களூரு முன்னிலையில் உள்ளது. அதற்கு அந்த அணி கிறிஸ் கெயில், விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகிய நட்சத்திர பேட்டிங் வரிசையைப் பெற்றிருப்பது காரணமாக இருக்கலாம். டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் இருவரும் இந்தத் தொடரில் சதம் அடித்தனர் என்றால், விராட் கோலி சமீபத்திய ஆட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறார். பந்துவீச்சைப் பொருத்தவரை மிச்செல் ஸ்டார்க், டேவிட் வீஸ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
பலம் என்று பார்த்தால் இரு அணிகளும் வலுவான அணிகளே. இதுவரை எப்படியோ, எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்தால், சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு நழுவும் என்பதால், இரு அணிகளுக்கும் இது ஒரு பலப்பரீட்சையாக அமைந்துள்ளது. 2009, 2011-ஆம் ஆண்டுகளில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ள பெங்களூரு அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டுமானால், முதலில் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியாக வேண்டும். ஆனால், அதற்கு ராஜஸ்தான் அவ்வளவு எளிதில் அடிபணியாது என்பதே நிதர்சனம்.
இதுவரை...
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மோதிய 14 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் ஆமதபாதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூரு 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
இடம்: புணே
நேரம்: இரவு 8 மணி