இளம் வயதில் முனைப்புடன் கிரிக்கெட் ஆடியிருக்கவேண்டும்: 44 வயது பிராட் ஹாக் வேதனை
இந்த ஐபிஎல்-லில் எப்படி ஒரு 17 வயது வீரர் கவனம் ஈர்த்துள்ளாரோ அதேபோல கொல்கத்தா அணியைச் சேர்ந்த 44 வயது பிராட் ஹாக் அதிக கவனம் பெற்றுள்ளார். ஐபிஎல்-லில் பங்குபெற வயது தடையில்லை என்பதை பிரவீன் டாம்பே, பிராட் ஹாக் ஆகியோர் நிரூபித்து வருகிறார்கள். சுனில் நரைனுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஹாக், பிரமாதமாகப் பந்துவீசி வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சென்னையுடன் ஆடிய இரு போட்டிகளிலும் 1/18, 4/29 என அசத்தலாக பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளிலும் 123 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய ஹாக், ஐபிஎல்-லில் 2012 முதல் ஆடிவருகிறார். ராஜஸ்தான் அணிக்காக முதலில் தேர்வானார். இந்த வருட ஏலத்தில் இவர் மீது நம்பிக்கை வைத்து கொல்கத்தா அணி 50 லட்சம் ரூபாய்க்குத் தேர்ந்தெடுத்தது. சுனில் நரைனுக்கு முதலில் வாய்ப்பளிக்கப்பட்டதால் ஹாக் அணியில் இடம்பெறமுடியாமல் இருந்தது. நரைன் பந்துவீச்சில் மீண்டும் புகார் கூறப்பட்டதால் ஹாக் உள்ளே நுழைந்தார். ஆடிய இரண்டு மேட்சுகளிலும் தூள் கிளப்பிவிட்டார். நரைன் மோசமாக பந்துவீசிக்கொண்டிருந்த நிலையில் கொல்கத்தாவுக்கு இது புதிய திருப்பமாக இருக்கிறது.
2008-க்குப் பிறகு அவர் சர்வதேச ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை. வார்னேவால் பலகாலம் அணிக்கு வெளியே நிறுத்தப்பட்டவருக்குக் குறைந்த வாய்ப்புகளே கிடைத்தன. 40 வயதில் ஆஸ்திரேலிய டி20 அணியில் ஆட வாய்ப்பு கிடைத்தபோது மீண்டும் கவனம் பெற்றார். ஐபிஎல்-லில் ராஜஸ்தான் அணிக்குத் தேர்வானார். அடுத்ததாக கொல்கத்தாவுக்கு.
"எங்கள் அணியில் மிகவும் உடற்தகுதி வாய்ந்த வீரர், அவர்தான். பயணம் காரணமாக அதிக அலைச்சல் இருந்தாலும் தவறாமல் ஜிம்முக்குச் செல்வார். அணியில் அதிக வேடிக்கை செய்பவரும் அவர்தான். எங்களால் அவருக்கு ஈடுகொடுக்கமுடியவில்லை” என்கிறார் கேகேஆர் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா.
ஐபிஎல்-லில் திடீர் நட்சத்திரம் ஆகியிருப்பதை மிகவும் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறார் ஹாக். இத்தனை வருட அனுபவம் அவருடைய வார்த்தைகளில் தெரிகிறது.
"இந்த வயதில் ஐபிஎல்-லில் ஆடுவது என் பாக்கியம். என்னால் இன்னும் கிரிக்கெட் விளையாட முடிவதை எண்ணி மகிழ்கிறேன். சிறுவயதில் கிரிகெட்டை இன்னும் அதிக முனைப்புடன் ஆடியிருக்கவேண்டும். நாட்டுக்காக ஆடும்போது இன்னும் இயல்பாக ஆடியிருக்கலாம். என்னைப் போல பலருக்கும் ஆடுகளத்தில் ஆட ஆசை. ஆனால் முடியாமல் போய்விடுகிறது. சரியான பங்களிப்பு இல்லாததோ அல்லது அதிர்ஷ்டமில்லாததோ ஏதோ ஒன்று காரணமாக இருக்கலாம். இப்போது இந்த இடத்தில் இருப்பதற்கு மிகுந்த அதிர்ஷ்டம் உடையவனாக உள்ளேன். இளைஞர்களுக்கு என்னுடைய அறிவுரை - கிரிக்கெட்டை மதியுங்கள். கிடைக்கிற வாய்ப்பை அனுபவியுங்கள். வீரர்களுடன் வாக்குவாதம், மோதல் ஏற்படும்போது அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம். அப்படியே அதுபோல இருந்தாலும் ஆடுகளத்துக்கு வெளியே அதை மறந்து நட்பு பாராட்டவேண்டும்.” என்கிறார் பிராட் ஹாக்.