ரூ. 26.5 கோடி... 167 ரன்கள்
எட்டாவது ஐ.பி.எல்., தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில்
முதல் இரு இடத்தில் உள்ள யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக் இருவரும்
ரன்கள் சேர்க்க, தொடர்ந்து திணறுகின்றனர்.
கடந்த 2011 உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் யுவராஜ் சிங், 33. பின்
ஏற்பட்ட ‘கேன்சர்’ கட்டியில் இருந்து மீண்டு வந்த இவர், 2012, 2014 உலக
கோப்பை ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றார்.
பின் மோசமான ‘பார்ம்’ காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட இவரை,
2015 உலக கோப்பை தொடரில் சேர்க்கவில்லை. இவரை, எட்டாவது ஐ.பி.எல்.,
தொடருக்காக, டில்லி அணி ரூ. 16.5 கோடிக்கு வாங்கியது.
அதேபோல, இந்திய ‘டுவென்டி–20’ அணியில் 2010க்குப் பின் பங்கேற்காதவர்
தமிழக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், 29. கடைசியாக 2014, மார்ச் 5ல்
ஆப்கன் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். இவருக்கு
பெங்களூரு அணி ரூ. 10.5 கோடி கொடுத்தது.
இப்படி கொட்டிக் கொடுத்த அணி நிர்வாகத்தை, இருவரும் தொடர்ந்து
வெறுப்பேற்றி வருகின்றனர்.
டில்லி அணியில் யுவராஜ் விளையாடிய முதல் 7 போட்டிகளில் ஒரு
அரைசதம் (54) அடித்து, மொத்தம் 124 ரன்கள் தான் எடுத்துள்ளார். இவரது
சராசரி 17.71 ரன்னாக உள்ளது அணி நிர்வாகத்தை வருத்தத்தில்
ஆழ்த்தியுள்ளது.
தினேஷ் கார்த்திக் இதுவரை 6 போட்டியில் விளையாடிய இவர், 4 முறை
பேட்டிங் செய்ய களமிறங்கி 43 ரன்கள் தான் எடுத்துள்ளார். அதாவது ரூ. 10.5
கோடிக்கு ஏலம் போன தினேஷ் கார்த்திக்கின் சராசரி 10.75 ரன்கள் தான்.
இப்படி டில்லி, பெங்களூரு அணிகளால் ரூ. 26.5 கோடிக்கு வாங்கப்பட்ட
யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக் சேர்ந்து, மொத்தமே 167 ரன்கள் (124+43)
மட்டுமே எடுத்துள்ளனர். வரும் போட்டிகளிலாவது பிரகாசிப்பார்களா என
பொறுத்திருந்து பார்ப்போம்.