டென்னிஸ் விளையாட்டில் பாதிப்பு : மனைவியை பிரிகிறார் வாவ்ரிங்கா
லாசேன்: டென்னிஸ் விளையாட்டில் போதிய கவனம் செலுத்த முடியாததால் மனைவியை விவகாரத்து செய்யப்போவதாக பிரபல டென்னிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா அறிவித்துள்ளார்.டென்னிஸ் தர வரிசையில் உலகின் 9ம் நிலை வீரரும், முன்னாள் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியனுமான சுவிட்ஜர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா, சுவிட்ஜர்லாந்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், முன்னாள் பேஷன் மாடலுமான இல்ஹாமை 2005ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்தார். 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் இல்ஹாம் கர்ப்பமான நிலையில், திருமணம் செய்து கொண்டார். 2010ம் ஆண்டு பிப்ரவரியில் இவர்களுக்கு அலெக்சியா என்ற மகள் பிறந்தார்.
டென்னிஸ் விளையாட்டில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்காக மறு ஆண்டே மனைவியைப் பிரிந்தார் வாவ்ரிங்கா. தனித்து வாழ்ந்த வாவ்ரிங்கா டென்னிஸ் விளையாட்டில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற நிலையில், மனைவியுடன் மீண்டும் சமரசம் செய்து கொண்டு சேர்ந்து வாழ்ந்தார். இந்நிலையில், கடந்த வாரம் மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் மூனறாம் சுற்றில் கிரிகோர் டிமிட்ரோவ், வாவ்ரிங்காவை எளிதில் தோற்கடித்தார். தனது டென்னிஸ் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு குடும்ப வாழ்க்கையே காரணம் என்று கருதிய வாவ்ரிங்கா, மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இது பற்றி சமூக வலைத்தளமான ‘பேஸ் புக்’கில் வாவ்ரிங்கா தகவல் வெளியிட்டுள்ளார். இல்ஹாமுடன் சுமார் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த தொடர்பை முறித்துக் கொள்ளப்போவதாக அதி்ல் ஸ்டாலிஸ்லாஸ் வாவ்ரிங்கா தெரிவித்துள்ளார்