Matrimony OTT-Platforms Jobs Coupons Business

புளித்த ஏப்பத்துக்கு கோதுமை கஞ்சி










                  நவதானியங்களில் ஒன்றான கோதுமையானது பனிக்காலங்களில் பயிராகின்றது. வட இந்தியாவிலும், வங்காளதேசத்திலும் இதுவே முக்கிய உணவாக மக்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நமது அன்றாட வாழ்விலும் ஒன்றாகிவிட்ட கோதுமையின் மகத்தான பயன்களை இனி தெரிந்துக் கொள்வோமா?

* முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.

* வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.

* கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.

* கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.

* வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும்.

உடல் பலம் அதிகரிக்க:

கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.

கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும்.

உலோகத் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு வாய் மூலமாகவோ, சுவாசத்தின் மூலமாகவோ, தோல் வழியாகவோ உலோகம் உடலினுள் சென்று ரத்தத்தில் கலந்து விடுவதால் ஏற்படும் உலோக நஞ்சைப் போக்க, கோதுமை மாவை நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால் போதும். அந்த நஞ்சு முறிந்துவிடும்.

கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும், வேறுவகை நோயினால் அவதிப்பட்டுத் தெளிந்தவர்களும் விரைவில் உடல்நலம் தேறுவார்கள்.



கோதுமை மாவை நெய்விட்டு வறுத்து, சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல், வெட்டை ஆகியவை குணமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமை அதிக நன்மை தரக்கூடியது, இவர்கள் கோதுமையை ரொட்டி, அடையாக செய்து சாப்பிடுவது நல்லது. சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

முகம் பளபளக்க:

கோதுமை மாவுடன் தயிர் மற்றும் பச்சைப் பயிறு மாவு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவர முகச்சுருக்கம், கரும்புள்ளி, முகத்தில் ஏற்படும் அழுக்கு, தேமல் போன்றவை மறையும். முகம் பளபளக்கும்.

உடல் குளிர்ச்சியால் ஏற்பட்ட நோய்களுக்கும், கட்டிகளின் உள்ளூர எரிச்சலுக்கும், மூட்டுவலி-தசை வலிக்கும் கோதுமை தவிட்டை வறுத்து, துணியில் முடிந்து ஒற்றடமிட நலம் உண்டாகும்.

கோதுமையில் சம்பா கோதுமை, மா கோதுமை, யவா கோதுமை, வால் கோதுமை என பல வகை உண்டு. இவற்றில் சம்பா கோதுமையை இரண்டு, மூன்றாக உடைத்து நீர்விட்டு வேக வைத்தோ, வடித்து அல்லது வடிக்காமல் கஞ்சியாகவோ சாப்பாட்டிற்கு பதிலாக உட்கொள்ள கொடுக்க மதுமேக நோயாளிகளின் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.

கோதுமையில் ஸ்டார்ச், அமினோ அமிலங்கள், நார்ச் சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் உட்கொண்டு நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.

கோதுமையில் உள்ள அற்புதமான ஊட்டச்சத்து:

கோதுமை, பச்சைப்பயிறு, உளுந்து, பொட்டுக்கடலை, கம்பு, அரிசி - இவைகளை வறுத்து பொடித்துக் கொள்ளவும். தேவையான அளவு மாவை எடுத்து, அதனுடன் சூடான பால், வெல்லம் சேர்த்து உருண்டைபோல் உருட்டி காலை, மாலை டிபனாக உட்கொள்ளலாம். இந்த உணவு அதிக ஊட்டச்சத்து கொண்டது. ஊட்டச்சத்துக் குறைவினால் அவதிப்படுபவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் இதனை உட்கொண்டால் ஆரோக்கியமான உடல் சக்தியைக் கூடிய விரைவில் பெறலாம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad