வெற்றிக்கு காரணம் பாண்டிங்கின் நேர்மறையான அணுகுமுறை: ஹர்பஜன்
தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் தோல்வியடைந்த பிறகு, மும்பை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ததற்கு அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்கின் நேர்மறையான அணுகுமுறையே காரணம் என்று, சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை, பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து 209
ரன்கள் எடுத்தது. லெண்டில் சிம்மன்ஸ் (59 ரன்கள்), உன்முக்த் சந்த் (58 ரன்கள்), ரோஹித் சர்மா (42 ரன்கள், 15 பந்து) ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறிது நேரமே களத்தில் இருந்தாலும் டி வில்லியர்ஸ் 11 பந்துகளில் 41 ரன்கள் (5 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசி மிரள வைத்தார். டேவிட் வீஸ் 47 ரன்கள் (25 பந்து) அடித்திருந்தார். பெங்களூரு அணியின் மற்ற வீரர்கள் பொறுப்புடன் ஆடத் தவறியதால் மும்பை 18 ரன்களில் வெற்றி பெற்று, இந்தத் தொடரில் தனது வெற்றிக் கணக்கைத் தொடக்கியது.
முதல் வெற்றி குறித்து ஹர்பஜன் கூறியதாவது:
வெற்றி, தோல்வி எதுவாகினும் பாண்டிங் நேர்மறையான சிந்தனையுள்ளவர். இந்த வழியில்தான் அவர் தனது வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் ஆடியுள்ளார். எப்போதுமே 100 சதவீதம் முயற்சிக்க வேண்டும் என்று வீரர்களிடம் அவர் அறிவுறுத்துவார். அதைத்தான் வீரர்கள் செய்து வருகின்றனர்.
நான்கு ஆட்டங்களில் தோல்வியடைந்தபோதும் பாண்டிங் அமைதியாகவும், தெளிவாகவும் இருந்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ் வெவ்வேறு தருணங்களில் எப்படி பேட் செய்ய வேண்டும் என்பதை இளம் வீரர்கள் கற்றுள்ளனர். இது எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த வீரர்களாகத் திகழ உதவும். உன்முக்த் சந்த் போன்ற வீரர்கள் தாங்களாகவே மெருகேறி வருவதும் பாராட்டுக்குரியது என்றார் ஹர்பஜன்.
ரோஹித்துக்கு அபராதம்: இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் குறைவான ஓவர்களே வீசியதால், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்படும் முதல் கேப்டன் ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது