சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனாவை சமாளிக்குமா பிஎஸ்ஜி?
ஸ்பெயினின் பார்சிலோனாவில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது கட்ட காலிறுதியில் பார்சிலோனா, பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) அணிகள் மோதவுள்ளன.
பாரிஸில் கடந்த வாரம் நடந்த முதற் கட்ட காலிறுதியில் பார்சிலோனா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருப்பதால், அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதியைப் பற்றி பிஎஸ்ஜி நினைத்துப் பார்க்க முடியும்.
ஆனால், லியோனெல் மெஸ்ஸி, நெய்மர், லூயிஸ் செளரஸ் ஆகிய கோல் அடிக்கும் புயல்களை சமாளித்து பிஎஸ்ஜி வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல.
தவிர, ஆட்டம் சொந்த மைதானத்தில் (கேம்ப் நூ) நடைபெறுவதால் ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனாவுக்குத்தான் சாதகமான சூழல் நிலவுகிறது.
சஸ்பெண்ட் காரணமாக கடந்த ஆட்டத்தில் பங்கேற்காத நட்சத்திர வீரரான ஸ்லேடன் இப்ராஹிமோவிச், நடுகள வீரர் மார்கோ வெராட்டி ஆகியோர் அணிக்குத் திரும்பியிருப்பது பிஎஸ்ஜிக்கு பலம்.
கடந்த முறை பிஎஸ்ஜி கேப்டனும் பின்கள வீரருமான தியாகோ சில்வா காயம் காரணமாக ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வெளியேறியதால், அவருக்குப் பதிலாக சரியான உடற்தகுதியுடன் இல்லாத டேவிட் லூயிஸ் களம்புகுந்தார். லூயிஸ் ஃபார்மில் இல்லாத பலவீனத்தை சரியாகப் பயன்படுத்தி இரண்டு முறை அவரது கால்களுக்கு
இடையிலேயே பந்தைக் கடத்தி விட்டு, அற்புதமாக இரண்டு கோல்கள் அடித்தார் செளரஸ். இந்த முறை அந்தத் தவறை திருத்தும் முனைப்பில் உள்ள லூயிஸ் கூறுகையில், "வலி ஏதும் இல்லை. இருந்தாலும் அந்த ஆட்டத்துக்குப் பின் சோர்வடைந்து விட்டேன். பார்சிலோனோவில் எங்களால் முடிந்தவரை வெற்றிக்கு முயற்சிப்போம். இன்னும் நாங்கள் ஆட்டத்தில் இருக்கிறோம்' என்றார்.
பாரிஸில் நடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக அவதிப்பட்ட ஆண்ட்ரெஸ் இனீஸ்டா, இந்த ஆட்டத்தில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. அத்துடன் சஸ்பெண்ட் முடிந்து பின்கள வீரர் டேனி ஆல்வ்ஸ் அணிக்குத் திரும்பியிருப்பதும் பார்சிலோனாவின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
சொந்த மண், நட்சித்திர வீரர்கள் என அனைத்தும் பார்சிலோனாவுக்கே சாதகமாக இருப்பதால், கடந்த எட்டு சீசன்களில் ஏழாவது முறையாக அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவதைத் தடுக்க முடியாது என்றே தெரிகிறது.
இறுதி ஆட்டத்துக்கு நிகர்: ஜெர்மனியைச் சேர்ந்த பேயர்ன் மியூனிச், போர்ச்சுகலைச் சேர்ந்த போர்டோ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கட்ட காலிறுதி பெர்லின் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. முதல் கட்ட ஆட்டத்தில் 3-1 என போர்டோ வெற்றி பெற்றிருப்பதால், பேயர்ன் மியூனிச் அணி சொந்த மண்ணில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனால்தான் "இந்த ஆட்டம் எங்களுக்கு இறுதி ஆட்டத்தைப் போன்றது' என்றார் பேயர்ன் மியூனிச் பயிற்சியாளர் பெப் கார்டியாலா