முதல் வெற்றியைப் பெறுமா மும்பை?
இரண்டு அணிகள். ஒன்று, ஆடிய 2 மேட்சுகளிலும் வெற்றி பெற்றுவிட்டது. மற்றொன்று, ஆடிய மூன்றிலும் தோற்றுப் போயிருக்கிறது. எந்த அணி வெற்றி பெறும் என்று இதை வைத்து கணிக்கமுடியும். ஆனாலும் சென்னைக்கு எப்போதும் மும்பை கடும் சவாலை அளிக்கக் கூடியது. இரண்டு அணிகளும் போட்டியிடும்போது எந்த அணி வெற்றி பெறும் என்று சுலபமாக சொல்லிவிடமுடியாது.
மும்பைக்கு இப்போதைய நிலைமை புதிது அல்ல. சென்ற வருடம் தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்றுப் போய் பிறகு மீண்டு வந்து ஃப்ளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றது. அதனால் இந்தமுறை பெரிதாக அலட்டிக்கொள்லாமல் இருக்கிறது. பெரிய துயரத்திலிருந்து மீண்டு வந்துவிட்டால், அதன்பிறகு எத்தகையை சின்னச் சின்ன இடைஞ்சல்களும் பெரிய சிக்கலாக இருக்காது. மேலும் அதன் படைபலம் மிகவும் பெரிது, அனுபவம் வாய்ந்தது.
இதனால் எத்தனை தோல்விகளைச் சந்தித்தாலும் ஒருவித பயத்தோடுதான் அந்த அணியை எல்லா அணிகளும் எதிர்கொள்ளும். அந்த அணியில் ரோஹித் சர்மா மட்டும் ரன்கள் அடிக்க ஆரம்பித்துவிட்டால், பாதிப் பிரச்னைகள் தானாக விலகிவிடும். ஆண்டர்சன், பொலார்ட் ஃபார்மில் உள்ளது மும்பைக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த மூன்று பேரும்தான் மும்பையின் வெற்றிப் பயணத்துக்கு முக்கிய வீரர்களாக இருக்கப் போகிறார்கள்.
மும்பைக்கு பவுலிங் ஒரு பிரச்னையாக உள்ளது. மலிங்காவை எல்லா மேட்சுகளிலும் நம்பமுடிவதில்லை. ரஞ்சியில் முத்திரை பதித்த வினய் குமார் இன்னமும் ஐபிஎல்-லில் தன் ஆளுமையை வெளிப்படுத்தவில்லை. ஒரு நல்ல திருப்பத்துக்காகக் காத்திருக்கிறது மும்பை.
சென்னை அணி, வழக்கம்போல வெற்றிகளுடன் போட்டியை ஆரம்பித்துள்ளது. அணியில் பெரிய குறைகள் இல்லை. ஹஸ்ஸி, அபாட், ஹென்றி, பாபா போன்ற திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கமுடியாமல் தவிக்கிறது. ஈஷ்வர் பாண்டேவுக்குப் பதில் இர்பான் பதான் களமிறங்கலாம். மற்றபடி அணியில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கமுடியாது.
மும்பை அணி (உத்தேச X1): சிமன்ஸ், ஆதித்ய தரே, ரோஹித் சர்மா, ராயுடு, ஆண்டர்சன், பொலார்ட், ஸ்ரேயாஸ் கோபால், ஹர்பஜன் சிங், வினய் குமார், மலிங்கா, மிதுன்/பும்ரா
சென்னை அணி (உத்தேச X1) : பிரண்டன் மெக்கல்லம், டிவைன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா, டு பிளெஸ்ஸி, டிவைன் பிராவோ, எம்எஸ் தோனி (கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஈஷ்வர் பாண்டே/இர்பான் பதான், நெஹ்ரா, மோஹித் சர்மா.