வந்து அட்வைஸ் பண்ணுங்க... சச்சின், கங்குலி, டிராவிடுக்கு பிசிசிஐ அழைப்பு!
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் ஆலோசகர்களாக
செயல்பட முன்வருமாறு முன்னாள் கேப்டன்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ்
கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு
இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
அவர்களை முழு நேர ஆலோசகர்களாக
நியமிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கிரிக்கெட்
வாரியம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த வாரியத்தின் செயல்
குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் ஆலோசகர் பதவியை ஏற்குமாறு
கோரி மூன்று வீரர்களையும் முறைப்படி
அணுகவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த மூன்று முன்னாள் வீரர்களும்
பல காலமாக இந்திய கிரிக்கெட்டில்
இடம் பெற்றிருந்தவர்கள். அதிலும் சச்சின் நீண்ட
காலம் இந்திய அணிக்காக ஆடியவர்.
கங்குலி சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர்.
டிராவிட் மிகச் சிறந்த டெஸ்ட்
வீரராக பரிமளித்தவர். இவர்களின் தனித் திறமை, நீண்ட
கால அனுபவம், தற்கால கிரிக்கெட் குறித்த
ஞானம், எதிர்காலம் குறித்த மதிப்பீடு ஆகியவற்றின்
அடிப்படையில் மூன்று பேரையும் கூட்டாக
சேர்த்து ஆலோசகர்களாக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
தேசிய பயிற்சியாளர் நியமனம், இயக்குநர் தேர்வு, அணித் தேர்வு
உள்பட அனைத்து கிரிக்கெட் விவகாரத்திலும்
இவர்களின் ஆலோசனையைப் பெறவும் கிரிக்கெட் வாரியம்
விரும்புகிறதாம். இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்களைக்
கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியை அமைக்க கிரிக்கெட் வாரியத்
தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு செயல் குழு அதிகரம்
வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மூன்று முன்னாள் வீரர்களை
அணுகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சச்சின்
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார்.
டிராவிட், ராஜஸ்தான் அணியுடன் இணைந்து செயல்படுகிறார். கங்குலியின்
பெயரோ, அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படலாம்
என்று அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை
வேறு ஒரு நிறுவனத்திடம் விற்றது
தொடர்பான விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விற்பனைக்கு கூட்டத்தில்
அங்கீகாரம் தரப்படவில்லை. இதுதொடர்பாக மேலும் சட்ட ஆலோசனை
பெற்று முடிவெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது