நான் தோல்வியடைந்த கிரிக்கெட் வீரர் அல்ல: பிரவீண் ஆம்ரே
ராமாகந்த் அச்ரேக்கரின் 3 பிரதான கிரிக்கெட் மாணாக்கர்களில் சச்சின் டெண்டுல்கர் சென்ற உச்சத்திற்கு மற்ற இரண்டு வீரர்களான வினோத் காம்ப்ளியோ, பிரவீண் ஆம்ரேயோ செல்லவில்லை.
இதற்கு பல்வேறு சூழல்கள், புறக்காரணிகள் பிரதானமாக செயல்பட்டன. ஆனால் வினோத் காம்ப்ளிக்கு நடந்தது வேறு, பிரவீண் ஆம்ரேவுக்கு நடந்தது வேறு.
பிரவீண் ஆம்ரே இன்று பயிற்சியாளர்கள் அரங்கில் சிறப்பாக செயல்பட்டு வருபவர், தற்போது டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் கேரி கர்ஸ்டனுக்கு உறுதுணையாக பயிற்சியாளராக பிரவீண் ஆம்ரே செயல்படுகிறார். ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, அஜிங்கிய ரஹானே உள்ளிட்ட வீரர்கள் தற்போது பிரவீண் ஆம்ரேயின் பயிற்சியின் கீழ்தான் சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஒரு கிரிக்கெட் பேட்ஸ்மெனாக அவர் 1992-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளர் ராமாகாந்த் அச்ரேக்கரின் மாணாக்கராக தென் ஆப்பிரிக்கா தொடருக்குச் செல்லும் போது ஆம்ரே மீது எதிர்பார்ப்பு எழுந்தது. அவரும் அதிவேக டர்பன் ஆடுகளத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆலன் டோனல்ட் உட்பட சிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் கண்டார்.
அதுவும் இந்தியா சச்சின் விக்கெட் உட்பட 4 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் எடுத்து சரிவு முகம் கண்ட போது மிகவும் கடினமான சூழ்நிலையில், பயங்கர பந்து வீச்சு அதற்கு உறுதுணையான ஜாண்ட்டி ரோட்ஸ் உள்ளிட்டோரின் தென் ஆப்பிரிக்க பொறிபறக்கும் பீல்டிங், கெப்ளர் வெசல்ஸின் கேப்டன்சி ஆகிய கடின சூழ்நிலைகளுக்கு எதிராக பிரவீண் ஆம்ரே தனது அறிமுகப் போட்டியீல் 103 ரன்களை எடுத்து 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
இவர் இறங்கிய பிறகும் விக்கெட்டுகள் சரிந்து 146/7 என்று இருந்தது இந்திய அணி அப்போது ஆம்ரேயும், கிரண் மோரேயும் இணைந்து 101 ரன்களை 8-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். மோரே 214 பந்துகளைச் சந்தித்து 55 ரன்களை எடுத்தார். ஆம்ரே 299 பந்துகளைச் சந்தித்து 103 ரன்களை அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே எடுத்தார். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸை காட்டிலும் 23 ரன்கள் கூடுதலாக எடுத்தது. அந்த டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிய பிரவீன் ஆம்ரே 425 ரன்களை 42.50 என்ற சராசரியில் எடுத்திருந்தார். 1 சதம் 3 அரைசதங்கள் அடங்கும். 37 ஒருநாள் போட்டிகளில் 513 ரன்களை எடுத்தார் ஆம்ரே. சராசரி 20.52. 2 அரைசதங்கள். அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் 84 நாட் அவுட். இதுவும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அங்கு எடுத்ததே.
கடைசி டெஸ்ட் போட்டி இலங்கைக்கு எதிராக 1993-ம் ஆண்டு ஆகஸ்டில் ஆடியது. கடைசி ஒருநாள் போட்டி இலங்கைக்கு எதிராக பிப்ரவரி 20-ம் தேதி 1994-இல் ஆடியது. மிகவும் திறமையான, கேப்டன்சி திறமையும் படைத்த பிரவீன் ஆம்ரேயின் கிரிக்கெட் வாழ்க்கை மிகச்சுருக்கமாக முடிவுக்கு வந்தது.
இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் இன்று வரை சரியாக அறியப்படாத ஒன்றே. இவரிடம் ‘இந்திய அணியில் அதிகம் விளையாடவில்லை?; என்று அதிகம் பேர் கேட்டுள்ளனர். ஆனால் “நான் என்னால் இயன்ற அளவுக்கு சிறப்பாகவே பங்களித்தேன், மற்றவை என் கைகளில் இல்லை’ என்பதாகவே இவரது பதில் இருந்து வருகிறது.
ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்போ இணையதளத்துக்கு இவர் அளித்த நீண்ட பேட்டியில் நாட்டுக்காக ஆடிய அந்த குறுகிய கால அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதை மட்டும் இங்கு அளிக்கிறோம்:
டர்பன், கிங்ஸ்மீடில் அன்று சதம் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமை குறித்து மகிழ்ச்சி. அயல்நாட்டில் முதல் டெஸ்ட் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம், 38/4 என்ற நிலையில் இறங்கி சதம் எடுத்தேன்.
டெஸ்ட் வாய்ப்புக்காக 4 ஆண்டுகள் காத்திருந்தேன். முதல் தர கிரிக்கெட்டில் எனது சராசரி 87 ரன்கள். ஒரு சீசனில் நன்றாக ஆடி வாய்ப்பு கிடைத்தது போல் கிடையாது எனக்குக் கிடைத்த வாய்ப்பு. 4 சீசன்களில் அதிகமாக ரன்களை குவித்தேன். தீரா அவா என்னிடம் இருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் முறையாகச் சென்றது இந்திய அணியே. மேலும் அங்கு பிட்ச் நிலவரங்கள் பற்றி அதிகம் தெரியாது. பவுன்ஸ் பிட்ச்கள் என்று தெரியும் ஆனால் எவ்வளவு பவுன்ஸ் ஆகும் என்று தெரியாது. அங்கும் வசதிகளும் மிகக்குறைவு, உள்ளரங்க பயிற்சி களங்கள் இல்லை, பவுலிங் மெஷின் இல்லை. எனவே மனதளவிலான தயாரிப்பே கை கொடுத்தது. பந்து இந்த வேகத்தில், இந்த பவுன்சில் வந்தால் எப்படி ஆடுவ்து என்பது மனதளவு தயாரிப்பாகவே இருந்தது.
38/4 என்ற போது நான் மட்டுமே ஒரு பேட்ஸ்மென் கிரீசில் எஞ்சியிருந்தேன். மிகவும் சவாலான பந்து வீச்சுக்கு எதிராக 6 மணி நேரம் பக்கம் நின்றேன்.
ஏன் அதிகம் விளையாடவில்லை என்பதற்கான விடை என் கைகளில் இல்லை. இது விதிதான்.. நேர்மையாகக் கூற வேண்டுமெனில் விதிதான். நான் தோல்வியடைந்த கிரிக்கெட் வீரர் அல்ல. ஏனெனில் நான் வெற்றி அணியின் உறுப்பினர். நியூஸிலாந்து தொடருக்குச் சென்றோம், அங்கு நான் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். அதன் பிறகு நாட்டுக்காக விளையாடவே இல்லை. நாட்டுக்காக விளையாட முடியாமல் போய், இழந்த வாய்ப்பு என்னை 2 ஆண்டுகள் பாதித்தது. என்னால் சீரணிக்க முடியவில்லை. ஆனால், எதார்த்தமாக யோசிக்க தொடங்கினேன். அப்போதுதான் பயிற்சியாளராக முடிவெடுத்தேன், நடந்தது என்ன என்பதைப் பற்றி நான் நினைத்து அடைந்து, ஒடுங்கிப் போகாமல் லெவல் 1,2 என்று பயிற்சியாளருக்கான கோர்ஸ்களை முடித்தேன்.
நான் தீவிரமான இந்த முடிவை எடுக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு கசப்பான அனுபவத்தை உணர்ந்த நிறைய வீரர்களும் இப்படித்தான் மாறினர். நானும் மாறினேன். வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.” என்றார் பிரவீண் ஆம்ரே.