செல்போன் பயன்பாட்டால் உடல்நலம் பாதிக்கப்படாது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
டெல்லி: செல்போன் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இன்றைய மனிதனால் செல்போன் இல்லாமல் இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு செல்போன் மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிவிட்டது. செல்போன் பயன்படுத்துவதால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சு மனிதனுக்கு கேடு விளைவிக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சாலும் மனிதனின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் செல்போன் மற்றும் செல்போன் டவர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவை சேர்ந்து ஆய்வு நடத்தின. அதில் செல்போன் மற்றும் செல்போன் டவர்களால் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்க ஆய்வு குறித்த அறிக்கையை மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது. செல்போன் கதிர்வீச்சால் மலட்டுத்தன்மை, இதய கோளாறு, தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறதா என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்ய உள்ளது.