கஞ்சா: நினைவாற்றலை கெடுக்குமா அல்லது கொடுக்குமா?
Unknown
11 Mar, 2015
கஞ்சா ஒரு போதைப்பொருள் மட்டுமே அது உடலுக்கு கூடவே கூடாது என்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ, இல்லை..கஞ்சா என்பது ஓர் அருமருந்து என்கின்றனர்.
இதில் எது சரியானது? உண்மையில் கஞ்சாவுக்கு இரண்டு குணங்களும் உள்ளதாக விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்திருக்கிறார்கள்.
tetrahydrocannabinol மற்றும் Cannabidiol அல்லது THC (டிஎச்சி) மற்றும் CBD (சிபிடி) என்கின்ற எழுத்துக்களில் அழைக்கப்படும் இரண்டு பதார்த்தங்கள் கஞ்சா செடியில் இருக்கின்றன.
THC என்ற பதார்த்தம் தான் போதையை கொடுக்கிறது. அதேநேரம் மூளையில் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி ஞாபகசக்தியையும் கடுமையாக கெடுக்கின்றது என்கிறார் யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் வல் கியூரன்.
இரட்டைப் பண்புகள்
அதேநேரம், கஞ்சாவில் இருக்கின்ற CBD என்கின்ற பதார்த்தம் THC க்கு நேரெதிரான விளைவுகளைக் கொடுக்கின்றது.
மன அமைதியை ஏற்படுத்தி, மனக் குழப்பங்களுக்கு எதிரான, நினைவாற்றலை பாதிக்காமல் வைத்திருப்பதற்கான விளைவுகளை அளிக்கின்றது CBD என்கிறார் பேராசிரியர் வல் கியூரன்.
இந்த இரண்டு பதார்த்தங்களின் அளவும் கூடிக்குறைகின்ற போதே பிரச்சனை ஏற்படுகின்றது.
சில நாடுகளில் வீதிகளில் விற்கப்படுகின்ற கஞ்சா சுருள்களில் THC அதிகமாக, அதாவது 15 வீதம் வரை காணப்படுகின்றது. அதன் மூலமே, அதன் பாவனையாளர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த தூண்டும் விதத்தில் அது ஆட்கொண்டுவிடுகின்றது.
அதேநேரம், ஞாபகசக்திக்கு உதவக்கூடிய CBD அறவே இல்லாது போகின்றபோது, அந்த கஞ்சாவின் விளைவுகள் மிகவும் மோசமானவையாக மாறிவிடுகின்றன.
குறிப்பாக, THC உச்ச அளவில் இருக்கும் கஞ்சா சுருள்கள் நினைவாற்றலை கடுமையாகப் பாதிக்கும் என்றும் அதனைப் பயன்படுத்துவோரில் 10 வீதமானோர் அதற்கு அடிமையாகிவிடுவார்கள் என்றும் கூறுகிறார் பேராசிரியர் பேராசிரியர் வல் கியூரன்.
கஞ்சாவுக்கு அடிமையானவர்களுக்கு கஞ்சாவைக் கொண்டே உதவ முடியுமா என்று ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள், CBD அதிகமுள்ள கஞ்சா மருந்துகளைக் கொடுத்துப்பார்த்துள்ளனர்.
இதன்மூலம், தொடர்ந்து கஞ்சா புகைத்து அடிமையானவர்களில் ஏற்பட்டிருக்கின்ற நீண்டகால மாற்றங்களை CBD மூலம் சரிப்படுத்திவிட முடியும் என்று நம்புவதாக ஆய்வுகளை நடத்திய யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனைச் சேர்ந்த டாக்டர் டொம் ஃப்றீமன் பிபிசியிடம் கூறினார்.
தங்களின் ஆய்வுகள் வெற்றியளித்தால் கஞ்சாவுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான முதலாவது பலனுள்ள மருந்தைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று அவர் கூறுகின்றார்.
மனநோயை குணப்படுத்துமா?
இதனிடையே, கஞ்சா பாவனை மனநோயைத் தூண்டுகின்ற முக்கிய காரணி என்பதை இங்கு தெற்கு லண்டனில் சுமார் 800 பேரிடத்தில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளதாக த லான்செட் சைக்காட்ரி சஞ்சிகை கூறுகின்றது.
'சாதாரணமானர்களுக்கு THC-ஐக் கொடுத்தால் அவர்களை மனநோயாளிகள் ஆக்கமுடியும். ஆனால் ஏற்கனவே CBD கொடுக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு மனநோய் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும் என்று அண்மைய ஆய்வு முடிவை மேற்கோள்காட்டுகின்றார் லண்டன் கிங்ஸ் காலேஜ் பேராசிரியர் ராபின் முர்ரே.
அப்படியென்றால், கஞ்சாவில் உள்ள சிபிடி-ஐக் கொடுத்து மனநோயாளிகளை குணப்படுத்த முடியுமா என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்கின்றனர்.
இன்னும் இந்த ஆய்வு ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. முழுமையாக முடிவை தெரிந்துகொள்ள கொஞ்சக்காலம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.