Matrimony OTT-Platforms Jobs Coupons Business

காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இருதய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு







‘பிரேக் பாஸ்ட்’ என்பதன் பொருள் இரவு முழுவதும் சுமார் 10 மணி நேரம் உண்ணாமல் இருப்பதை உணவு உட்கொண்டு முடிப்பதாகும். இன்றைய நாகரீக அவசர உலகில் பலர் காலை உணவை தவிர்த்தே விடுகின்றனர்.

அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை அறிந்து, அனைவரும் இனி காலை உணவை கண்டிப்பாக உண்ண வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பண்டைய காலங்களில் காலை உணவு என்பது இடத்திற்கு ஏற்றார் போல் மாறுபட்டது. மேற்கத்திய நாடுகளில் பிரட், சீஸ், கொட்டைகள் போன்ற உணவுகள் இருந்தன.

ஐரோப்பிய நாடுகளில் அங்கிருந்த உயர் மட்ட பிரபுக்கள் உணவு மேஜையில் பல மணி நேரங்கள் செலவழிக்கும் வழக்கம் இருந்ததால் இரு வேளை உணவு வழக்கம் இருந்தது. ஜப்பான் நாட்டில் பல வகை கஞ்சி உணவுகள் காலை உணவாக இருந்தன. இந்தியாவில் மூலிகைகள், பட்டை, கிராம்பு, மிளகு, ஜீரகம் சேர்த்த உணவுகளும், இஞ்சி சாறு கட்டாயம் சேர்க்கப்பட்ட உணவும் பழக்கத்தில் இருந்தது.

இன்று உலகம் உங்கள் உள்ளங்கையில் என்ற அளவில் ஆகி விட்டதால் பிரட், ஓட்ஸ், சோளம், பழங்கள், கொட்டைகள் முதல் இட்லி, தோசை வரை எங்கும் எதுவும் எளிதாக கிடைக்கின்றன. என்றாலும், பள்ளி மாணவர் முதல் அலுவலகம் செல்பவர் வரை அவசரம் என்ற பெயரில் இவற்றை ஒதுக்குவதன் காரணமாகவே நோய்கள் அதிகரித்து ஆரோக்கியம் குறைந்து உள்ளது.

காலை உணவின் மூலமே உடலின் அன்றாட செயல்பாட்டுத்திறனை உருவாக்க முடியும். காலையில் சோர்வாக அல்லது சிடுசிடுவென்று இருப்பவர்களில் பலர் காலை உணவை உண்ணாதவராகவே இருப்பார்கள். தேவையான சக்தியின்மையின் காரணமே அவர்கள் சோர்வாகவும் சிடுசிடுவென்றும், வேலையில் அதிக கவனமின்றியும் காணப்படுவார்கள்.

இளம் வயதினர் காலையில் ஓடும் பயிற்சியினை உடற்பயிற்சியாக செய்வார்கள். இது மிக நல்ல வழக்கமே. இதுபோல் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்கள் பயிற்சிக்கு 20 நிமிடம் முன்பாக ஒரு வாழைப் பழமோ அல்லது  கப் தயிரில் தேன் சேர்த்தோ சாப்பிடுவது அவர்களுக்கு அதிக சோர்வு ஏற்படாமல் தடுக்கும்.

நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதன் காரணமாக ரத்தத்தில் குறைந்திருக்கும் சர்க்கரையின் அளவை கூட்டுவதற்கும், மூளைகளும் தசைகளுக்கும் சக்தி கொடுப்பதற்கும் காலை உணவு அவசியமாகின்றது. காலை உணவை உட்கொள்ளும் பள்ளி மாணவர்கள் நன்கு படிப்பதாகவும், ஒழுக்கமான முறையில் நடந்து கொள்வதாகவும், அளவான எடையோடு இருப்பதாகவும் பல ஆய்வுகள் நிரூபித்து உள்ளன.

உடலுக்கு கார்போஹைடிரேட் எனப்படும் மாவுச்சத்து அவசியமானதே 45-65 சதவீத கார்போஹைடிரேட் உணவு ஒருவருக்கு தேவையான சக்தியை கொடுக்கின்றது. நார் சத்து மிகுந்த முழு தானியம் காய்கறியிலிருந்து கிடைக்கும் சக்தியே சிறந்தது. ஓட்ஸ், தீட்டாத அரிசி போன்றவை மிக சிறந்த உணவுகளாக கருதப்படுகின்றன.

கார்போஹைடிரேட்டே இல்லாத உணவு சரியானதல்ல என்பதையும் உணர வேண்டும். இதனால் உடலில் சோர்வு ஏற்பட்டு நீர் தன்மை குறைந்து ஆபத்தான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். சாக்லேட், சர்க்கரை, பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகளாகும். கட்டுப்படான உணவை உண்ணும் முறையான உணவு பழக்கம் உடையவர்களில் 88 சதவீதம் பேர் காலை உணவை உண்பவர்களாக இருக்கின்றனர்.

இது தொடர்பாக நடந்த ஆய்வில் தூங்கி எழுந்த ஒரு மணி நேரத்தில் ஏதாவது உண்ண வேண்டும். இல்லையெனில் நேரம் செல்லச் செல்ல அதிக உணவை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது என்று தெரியவந்துள்ளது. ஆகையால்தான் காலையில் ஓட்ஸ் கஞ்சியில் சிறிது பால், பழம், ஓரிரு பாதாம் சேர்த்தோ அல்லது சத்து மாவு கஞ்சியோ ஒரு தம்ளர் அளவு குடிப்பது மிகவும் நல்லது.

காபி, டீ பழக்கம் உடையவர்கள் அதற்கு பின் சிறிது நேரம் கழித்து இதனை எடுத்துக் கொள்ளலாம். அதற்குப் பிறகு கூட காலை உணவில் கொழுப்பில்லாத தயிர், வாழைப் பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மேலும்

* முட்டை
* முட்டையின் வெள்ளை கரு (2)
* காபி, டீ
* ஆரஞ்சு ஜூஸ்
* முழு தானியங்கள்
* ப்ரவுன் அரிசி உணவு
* சோயா பால்
* வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக நம்மிடையே நம் நாட்டு உணவை குறைத்து மதிப்பிடும் வழக்கம் உள்ளது. இந்திய உணவு குறிப்பாக தென்னிந்திய உணவு அதிக எண்ணெய் மசாலா இல்லாமல் இருப்பதாலும் சிறு தானியங்களை (கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி) அதிகம் சேர்ப்பதாலும் மிக நல்ல உணவாகும்.

* ஓட்ஸ் இட்லி
* பருப்பு சேர்த்த சப்பாத்தி
* ரவா உப்புமா
* ஊத்தப்பம்
* கீரை ரொட்டி
* அவல் உப்புமா
* இட்லி சாம்பார், சட்னி போன்றவையும் மிக நல்ல உணவாகும்.

காலை உணவை தவிர்த்து மதியம் உண்பவர்கள் நீண்ட நேரம் உண்ணாமல் இருக்கின்றனர். எனவே மதிய உணவு உண்ணும் பொழுது உடல் இதனை கொழுப்பாக சேமித்துக் கொள்கிறது. இது உடலின் எடையைக் கூடச் செய்கின்றது. எனவே தான் பலரும் சாப்பிடுவது குறைவு. ஆனாலும் குண்டாக இருக்கின்றேன் என்று கூறுகின்றனர்.

மேலும் காலை உணவைத் தவிர்ப்போர் மதிய உணவை தேவைக்கு அதிகமாகவே உட்கொள்கிறார்கள். இவர்கள் இரவு உணவையும் அதிகமாகவே உட்கொள்வார்கள். டீ, காபி, சோடா, பிஸ்கட், நொறுக்கு தீனி போன்றவைகளை அதிகம் எடுத்துக் கொள்வார்கள். நார்சத்து நிறைந்த கார்போஹைடிரேட், குறைந்த கொழுப்பு, நல்ல புரதம் நிறைந்த காலை உணவு உண்டால் நொறுக்குத் தீனி பழக்கம் அடியோடு நீங்கும்.

காலை உணவு குழந்தைகளை படிப்பில் புத்திசாலி ஆக்குகின்றது. சிறந்த ரத்த ஓட்டத்தினை மூளை பெறுவதால் கவனிக்கும் தன்மை, கிரகிக்கும் திறன், திறமையாக பதில் சொல்லும் திறன் இவை அனைத்தும் கிடைக்கின்றன என அனைத்து ஆய்வுகளும் கூறுகின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு காலை உணவு என்பது மிக அவசியமான ஒன்று.

டீயும், பிஸ்கட்டும் தாய்க்கும் சேய்க்கும் போதுமான போஷாக்கை அளிக்காது. காலை உணவை தவிர்ப்பது இருதய பாதிப்பை ஏற்படுத்தலாம். தினமும் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு 30 சதவீதம் அதிகமாக இருதய பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலை உணவைத் தவிர்க்கும் விடலை பருவத்தினர் இளவயதிலேயே இருதய பாதிப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய் இவைகளுக்கு ஆளாவதாக பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

பெண்கள் தங்கள் உடலுக்கு தம்மை அறியாமலே செய்யும் தீங்காக கீழ்க்கண்டவைகள் கூறப்பட்டுள்ளன.

* தினமும் 6-8 தம்பளர் தண்ணீர் குடிக்காமல் இருப்பது.
* முறையான நேரத்தில் உண்ணாமல் இருப்பது. தேவையான அளவு உண்ணாமல் இருப்பது.
* தேவையான அளவு புரதம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது.
* தேவையான மாவுச்சத்து இல்லாமல் இருப்பது. (பசிக்கும் நேரத்தில் டீ, காபி கொண்டு சமாளிப்பது)
* தேவையான அளவு தூங்காமல் இருப்பது.
* உடற்பயிற்சி என்பதே இல்லாதிருப்பது.

‘ஒரு ராஜாவைப் போல் காலை உணவும், ராணியைப் போல் மதிய உணவும், ஒரு வறுமையானவன் போல் இரவு உணவும் இருக்க வேண்டும்.’ ஆனால் நாம் இதை தலை கீழாக செய்வதாலேயே ஆரோக்கிய மின்றி இருக்கின்றோம். சர்க்கரை நோயாளிகள் எந்நேரத்திலும் முறையாக உண்ண வேண்டும் என்றாலும் காலை உணவை தவிர்ப்பதும் தாமதமாக உண்பதும் ஆபத்தில் முடியும்.

ஏதோ ஒரு காரணத்திற்காக காலை உணவை தவிர்ப்பவர்கள் எடை கூடுவதோடு மட்டுமில்லாமல் அதிக சர்க்கரை உணவையும் எடுத்துக் கொள்வர். நமது இந்திய உணவு முறையாக எடுத்துக் கொண்டால் நல்ல விகிதாச்சார முறையிலேயே அமையும்.

ஆனால் நாம் இதனை கடை பிடிக்க மறந்து விடுகின்றோம். ‘பொறுமையான காலை உணவினால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்‘ என்ற வாக்கு உண்டு. ஒரு காலை உணவே நட்சத்திர உணவாக இருக்க வேண்டும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad