அடுத்த 18 மாதங்களில் டட்சன் குட்டிக் கார்: நிசான் அறிவிப்பு
கிராஷ் டெஸ்ட் பிரச்னைகளால் டட்சன் பிராண்டுக்கு ஏற்பட்ட சிக்கல்களை கண்டுகொள்ளாமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்கிறது நிசான். அடுத்த 18 மாதங்களில் டட்சன் பிராண்டில் குறைவான விலை கொண்ட புதிய குட்டிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.
நிசான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கில்லாம் சிகார்டு செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த தகவலை வெளியிட்டார். ஆல்ட்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் கார்களுக்கு நேரடி போட்டியான இந்த கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
ரெடி-கோ கான்செப்ட்
கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டட்சன் ரெடிகோ என்ற கான்செப்ட் மாடலை நிசான் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த காரின் தயாரிப்பு நிலை மாடலாக இந்த புதிய குட்டிக் கார் வர இருக்கிறது. இந்த கார் நிசான் நிறுவனமும், ரெனோ நிறுவனமும் இணைந்து வடிவமைக்கின்றன
விலை
5,000 டாலர் விலைக்குள் இந்த புதிய குட்டிக் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.3.25 லட்சம் ஆரம்ப விலை கொண்டதாக இருக்கும். ஆனால், பேஸ் மாடல் 4,000 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தரம்
குறைவான விலை மாடலாக இருந்தாலும், இந்த புதிய கார் தரமான பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சிகார்டு தெரிவித்தார்.
ஒண்ணும் பிரச்னை இல்ல...
கிராஷ் டெஸ்ட் பிரச்னையால் டட்சன் பிராண்டின் மாடல்களுக்கு பாதுகாப்பு பிரச்னை எழுந்துள்ளது. ஆனால், இந்த புதிய கார் போதிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானே வேணும்
குட்டி கார்களுக்கு மைலேஜ் முக்கிய விஷயம். எனவே, இந்த காரை இலகுவான உதிரிபாகங்களை கொண்டிருக்கும் என்பதால், சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்றும் சிகார்டு தெரிவித்தார். வரும் 2020ம் ஆண்டிற்குள் 5 சதவீத மார்க்கெட் பங்களிப்பை இந்தியாவில் பெற வேண்டும் என்ற நோக்கோடு இந்த புதிய காரை களமிறக்குகிறது நிசான்