மரத்து மேல் இருந்து டூப் போடாமல் குதித்த 'ராஜேந்திரன்'
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'இவனுக்கு தண்ணில கண்டம்'.
இதில் இவருக்கு ஜோடியாக நேஹா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டிய ராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை சின்னத்திரையில் நெடுந்தொடர்களை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் முதல் முறையாக பெரிய திரையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.ஆர்.வெங்கடேசன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தை விவிஆர் சினிமாஸ்க் என்ற நிறுவனத்தின் சார்பில் வி.வெங்கட்ராஜ் தயாரித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக 'நான் கடவுள்' ராஜேந்திரனுக்கு இப்படத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் சக்திவேல் கூறும்போது, 'நான் கடவுள்' ராஜேந்திரன் டீசரில் ஒரு நாயகன் போல் முழு டயலாக் பேசியதே வரவேற்பிற்கு பெரும் காரணமாய் அமைந்தது. “ ராஜேந்திரன் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் கதை எழுதும் பொழுதே அவர்தான் இக்கதாப்பாதிரத்தில் நடிக்க வேண்டும் என்று தீர்மாணித்து விட்டோம். அவரின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ராஜா ராணி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார', 'டார்லிங் ' ஆகிய படங்களில் இருந்த கதாபாத்திரங்களைவிட இப்படத்தில் கதையோடு நகரும் கதாப்பாத்திரமாக வருவார்.”
“ஒரு முழு நீள நகைச்சுவை படத்திற்கு, அவரது டயாலாக் டெலிவரியும், உடல் மொழியும் இப்படத்திற்கு பக்க பலமாய் அமைந்திருக்கிறது. இவரை வைத்தே டீசரை கட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினோம்.”
“ஒரு காட்சியில் அதிக எடையுள்ள துப்பாக்கியை வைத்துகொண்டு மரத்து மேல் இருந்து குதிக்க வேண்டும். டூப் போடாமல் அவரே குதித்து பலத்த காயம் ஏற்பட்டது. அதை துளிக்கூட பொருட்படுத்தாமல் ரீ-டேக் போலாம் என்று சொன்னார்.” என நெகிழ்ச்சியுடன் கூறினார் இயக்குனர்.