ஆதிவாசி பெண்ணை காதலித்து மணமுடித்த சுவீடன் என்ஜினீயர்!!!
சுவீடன் நாட்டை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர், இந்திய கலாசாரம் தன்னை மிகவும் கவர்வதாக கூறி ஆதிவாசி பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கடசோலை கரக்கோடு மட்டம் ஆதிவாசி காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி செல்லன் என்பவரது மகள் செல்வி(36).இவர் கோத்தகிரியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் பழங்குடியின வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் குறித்த பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.சுவீடனைச் சேர்ந்த நில்ஸ்வீக் லூண்ட்(38) என்ற வேதியியல் பொறியியலாளர், சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.தொழில் நிமித்தமாக சென்னை வந்த நில்ஸ்வீக் லூண்ட்டும், செல்வியும் நெருங்கி பழகிய போது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.
பின்னர் நில்ஸ்வீக் லூண்ட் இந்திய கலாசாரப்படி செல்வியை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்ததோடு, தனது வீட்டாருடன் கோத்தகிரி வந்து காதலியின் வீட்டினரை சந்தித்து பேசியுள்ளார்.இரு வீட்டாரும் சம்மதித்ததை தொடர்ந்து கோத்தகிரியில் உள்ள கோவிலில் ஆதிவாசிகள் கலாசார முறைப்படி திருமணம் நடந்துள்ளது.இந்த திருமணம் பற்றி நில்ஸ்வீக் கூறுகையில், நான் கடந்த 2009–ம் ஆண்டு செல்வியை முதன் முதலில் சென்னையில் பார்த்தேன்.அதன் பிறகு இந்திய கலாசாரம் குறித்து அவர் மூலம் நான் தெரிந்து கொண்டேன். இந்திய கலாசாரம் என்னை மிகவும் கவர்ந்தது.
பின்னர் செல்வியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு, எனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தேன்.இதையடுத்து அவர்களின் கலாசாரப்படி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கோத்தகிரியில் திருமணம் செய்து கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.