போதையிலிருந்து விடுபட எளிய வழிகள்!!!
போதையால் வாழ்க்கைப் பாதை மாறியவர்களின் மனம் எப்போதும் சலனப்பட்டுக் கொண்டே இருக்கும். அவர்கள் நினைத்தால் அந்தப் பழக்கங்களில் இருந்து மீள்வது சுலபமே. அதற்கான எளிய வழிகள் இங்கே...
* போதை தீமையானது என்பதை முதலில் உணருங்கள். அதனால் உங்கள் குடும்பநிலை பாதிக்கப்பட்டிருப்பதை சிந்தித்துப் பாருங்கள். பிறகு 'நான் போதையிலிருந்து நிச்சயம் விடுபடுவேன்' என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.
* போதை பழக்கம் உடையவரை மீட்கும் முயற்சியில் அவரது குடும்ப உறுப்பினர்களும் அக்கறை காட்டினால் விரைவான முன்னேற்றம் கிடைக்கும். "நீங்கள் இப்போது மாறி இருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றாக பசியெடுத்து சாப்பிடுகிறீர்கள், நன்றாக உறங்குகிறீர்கள். கோபம் குறைந்திருக்கிறது. குழந்தைகளுடன் பாசத்துடன் பழகுகிறீர்கள். தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் இருந்தால் புதிய மனிதராக மாறிடுவீர்கள்" என்று ஊக்கப்படுத்துவது நல்ல மாற்றத்தை உருவாக்கும்.
* பொதுவாக, போதைக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீளநினைப்பது உண்டு. ஆனாலும் அவர்களால் எளிதாக மீண்டு வர முடியாமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு.
* 'நான் அளவோடுதான் குடிக்கிறேன்' என்று விடாப்பிடியாக நம்புவதுதான் அவர்கள் மீண்டு வர முடியாமல் போவதற்கான முதற் காரணம். மீட்பு செயல்களில் இறங்கும்போது மனம் மதுவை நாடுவது இயல்பே. அந்த நேரத்தில் சிலர் 'நாம் வெற்றி பெறமாட்டோம்' என்று தடுமாறிப்போய் குடிப்பழக்கத்தை தொடர்ந்துவிடுவார்கள். இது இரண்டாவது காரணம்.
* அப்படிப்பட்ட நேரங்களில் 'மதுவுக்கு இனி இடம் கொடுக்கமாட்டேன்' என்ற உறுதிமொழியை மனதுக்குள் உச்சரியுங்கள். உங்கள் வாழ்வின் சந்தோஷமான தருணங்களை எண்ணிப்பாருங்கள். மதுப்பழக்கத்தால் வாழ்வில் ஏற்பட்ட இழப்புகளையும், குடும்பம் பாதிக்கப்பட்டிருப்பதையும் நினைவில் கொண்டு அதில் இருந்து மீள்வதே என் முதல்பணி என்ற திடமான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதிற்குப் பிடித்த செயல்களில் இறங்கி இறுக்கமான அந்தச் சூழலை மாற்றிவிடுங்கள்.
* உங்கள் வீட்டின் எந்த ஒரு மூலையிலும் மதுபாட்டில்கள், மற்ற போதை பொருள்களுக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* நண்பர், உறவினர் என யாரும் உங்கள் வீட்டிற்குள் போதைப் பொருட்களை கொண்டு வர அனுமதிக்காதீர்கள். அவர்களைக் கண்டித்தால் மனம் புண்படுமோ என்று கவலைப்படாதீர்கள். உங்கள் மாற்றத்தை கனிவுடன் கூறி கண்டிப்பாய் மறுத்துவிடுங்கள். நண்பராய் இருந்தாலும் மறுக்க வேண்டியதை மறுத்தும், சுட்டிக் காட்ட வேண்டியதை சுட்டிக் காட்டுவதும் அவசியம் என்பதை வள்ளுவர் 'நகுதற் பொருட்டன்று நட்பு மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு' என்று கூறுகிறார்.
* விருந்து நிகழ்ச்சிகளில் மது பார்ட்டிக்கு ஏற்பாடானால் அந்த இடத்தை காலி செய்யத் தயங்காதீர்கள்.
* உங்கள் கட்டுப்பாட்டுடன் மனநல மருத்துவர்களின் ஆலோசனைப்படி செயல்படுவதும் நல்ல மாற்றத்தை உருவாக்கும். மருத்துவரே சிகிச்சை முடிந்துவிட்டது என்று சொல்லும் வரை அவரது ஆலோசனைகளை தொடர்ந்து கடைப்பிடியுங்கள்.
* மதுவால் மதிமயங்கும். மனம் அமைதியை இழக்கும். எளிதில் கோபம் வரும். மறதி ஏற்படும். எந்தக் காரியத்தையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. இதனால் அத்தியாவசியத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகும். தைரியமின்மை அதிகரித்து எளிதான காரியத்தையும் சமாளிக்க முடியாமல் போகும். இறுதியில் வெறுப்பு உச்சமாகி வாழ்வே சலித்துவிடும். இதனால் மனஅழுத்தம் தொற்றிக் கொள்ளும். மதுவால் ஏற்படும் மற்ற வியாதிகளும் உடலையும், வாழ்வையும் நாசமாக்கிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.