சிலையானாலும் கூட பன்னீர்செல்வத்தை நிமிர விடமாட்டார்களோ..?
தலைவர்கள் பலருக்கும் மெரீனா பீச்சில் சிலை வைப்பது தமிழர்களின் பண்பாடாகிவிட்டது. அதேபோல தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் சிலை வைத்தால், அது எப்படி இருக்கும் என்று கேலி செய்து ஒரு படம் வாட்ஸ்-அப் போன்ற சமூக தளங்களில் சுற்றிவருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்றோருக்கு தமிழகத்தின் பல இடங்களிலும் சிலைகள் உள்ளன. எம்ஜிஆர் சிலைகள் இரட்டை விரலை காண்பித்து வெற்றி நமதே என்று கூறுவதை போலவும், அண்ணா சிலைகள் ஒரு கையை நீட்டியபடியும் இருப்பது வழக்கம். சட்ட மேதை அம்பேத்கர் சிலைகள் கையில் புத்தகம் இருப்பது போலவும் சிலை இருக்கும். கண்ணகி சிலை என்றால் கையில் சிலம்புடன் ஆக்ரோஷமாக நியாயம் கேட்பது போன்ற சிலை உள்ளது. உயிரோடு இருப்பவர்களுக்கும் சிலை வைப்பதும் நமது கலாச்சாரத்தில் கலந்துவிட்டது. குஷ்பு, விஜய் போன்ற சினிமா கலைஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இரு முறை முதல்வராக பதவி வகித்த கவுரவத்துக்கு உரியவர் என்பதால் இவருக்கும் இப்போது சிலை வைத்தால் அந்த சிலை எப்படி இருக்கும் என்ற கற்பனையோடு ஒரு போட்டோ வாட்ஸ்-அப்பில் வலம் வருகிறது. அந்த போட்டோவை பார்த்தால் சிற்பி ஏதும் தவறு செய்து பன்னீர்செல்வம் உருவத்தை இப்படி செதுக்கிவிட்டாரா என்ற சந்தேகம் பெரும்பான்மையோருக்கு வராது. ஏன் அவர் அப்படி நிற்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயதானே.