பெங்களூருவில் நெட் கஃபேக்கு போறவங்களுக்கு ஐடி கார்டு கட்டாயம்! போலீஸ் உத்தரவு!!!

டிவிட்டரை பயன்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவு திரட்டியதாக பெங்களூரை சேர்ந்த இன்ஜினியர் கைது செய்யப்பட்ட நிலையில், பொது கம்ப்யூட்டர் மையங்களை பயன்படுத்துவோர் அடையாள அட்டையை காண்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது பெங்களூரு காவல் துறை. பெங்களூரு ஜாலஹள்ளியில் வசித்தபடி ஐடிசி உணவு நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்துவந்த மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற வாலிபர், டிவிட்டர் வலைத்தளம் மூலமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்து வந்ததை இங்கிலாந்தின் சேனல்-4 தொலைக்காட்சி சேனல் அம்பலப்படுத்தியது. இதைத் தொடர்ந்து பெங்களூரு போலீசார் மேதி மஸ்ரூரை கைது செய்தனர்.

அவர் 60 ஜிபி திறன்கொண்ட இணையதள சேவையை பயன்படுத்தி தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததும் விசாரணையில் தெரியவந்தது. தீவிரவாத எண்ணத்தை விதைப்பதில் இணையதளத்தின் பங்களிப்பை உணர்ந்த பெங்களூரு போலீசார் இணையதள பயன்பாட்டை கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். கம்ப்யூட்டரின் ஐபி முகவரியை வைத்து ஒருவரை கண்காணிக்க முடியும் என்பதால், விஷமிகள், கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே கம்ப்யூட்டர் மையங்களுக்கு வரும் வாடிக்கையாளரின் அடையாள அட்டையை சரிபார்த்து, செல்போன் எண், வீட்டு முகவரி போன்றவற்றை வாங்கிக்கொள்ளும் பொறுப்பை கம்ப்யூட்டர் மைய நிர்வாகிகள் ஏற்க வேண்டும் என்று பெங்களூரு காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சுமார் நான்காண்டுகளுக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டது. உத்தரவு வந்ததும் சுறுசுறுப்பு காண்பித்த கம்ப்யூட்டர் மைய நிர்வாகிகள் பிறகு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டனர். ஆனால் இப்போது மீண்டும் விதிமுறையை பின்பற்றும் தேவை வந்துள்ளதால், பெங்களூரு நகரிலுள்ள பல கம்ப்யூட்டர் மையங்களில் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். மத்திய பெங்களூருவில் சோதனை நடத்திய போலீசார் 3 கம்ப்யூட்டர் மையங்கள் மீது நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதுபோன்ற சோதனைகள் நகரமெங்கும் உள்ள பிற கம்ப்யூட்டர் மையங்களிலும் நடத்தப்படும் என்று போலீஸ் துணை கமிஷனர் சந்தீப் தெரிவித்துள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad