டில்லியில் தாக்குதல் நடத்த லஷ்கர் பயங்கரவாதிகள் சதி: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கையால் போலீசார் உஷார்

புதுடில்லி: 'லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், டில்லி யில் தாக்குதல் நடத்தலாம்' என, மத்திய அரசை, அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளதால், டில்லி போலீசாரும், உளவுத் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.இதுதொடர்பாக, உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பினர், தலைநகர் டில்லியில் தாக்குதல் நடத்தலாம் என, அமெரிக்க உளவு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், எப்போது, எந்த இடத்தில் தாக்குதல் நடத்தலாம் என்ற, குறிப்பிடத்தக்க தகவல் இல்லை. சிறப்பு விருந்தினர் ஆனாலும், பாதுகாப்பு விஷயத்தில், எந்த விதமான தளர்வுக்கும் இடம் கொடுக்க, மத்திய அரசு விரும்பவில்லை. மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் நடைபெறும் குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். அவரின் இந்திய பயணம் உறுதி செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கைகள் வந்துள்ளதால், தலைநகர் டில்லியில், அம்மாநில போலீசாரும், மத்திய உளவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், அண்டை மாநிலங்களான உ.பி., மற்றும் ராஜஸ்தானிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு தொடர்பாக, டில்லி போலீசார் மற்றும் உளவு நிறுவனங்கள் இடையே அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதோடு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து, பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து டில்லி போலீஸ் கமிஷனர் பாசி விவரித்துள்ளார்


குடியரசு தினவிழா அணிவகுப்பு செல்லும் பாதையில், பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அமெரிக்க அதிபர் ஒபாமா அமரும் இடம் ஏற்கனவே, 'சீல்' வைக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும், வி.வி.ஐ.பி.,க் கள் அமரும் பகுதியில், அடிக்கடி மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறிய உதவும் கருவிகள் மூலம், அடிக்கடி சோதனை நடத்தப்படுகின்றன. இதுதவிர, குடியரசு தினம் நெருங்கும் நேரத்தில், வேறு பல விசேஷமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad