நாட்டில் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதே அரசின் குறிக்கோள்: வெங்கையா
புதுடில்லி: நாட்டில் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதே அரசின் முக்கிய குறிக்கோள் என்றும், மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால், இது தொடர்பாக உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆக்ராவில் நடந்த கட்டாய மதமாற்றம் தொடர்பாக, லோக்சபாவில் இன்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார். அவர் தனது பதிலில், மத மாற்றம் குறித்து நாங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இது வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இது தொடர்பாக செய்தது என்ன? மத மாற்றத்தை பா.ஜ.,வும் ,மத்திய அரசும் ஒருபோதும் ஏற்று கொள்ளாது. இதனை தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஆனால் அரசு மீது களங்கம் கற்பிக்க ஆக்ரா சம்பவத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். இதனை நிறுத்தி கொள்ள வேண்டும். இது தொடர்பாக ஆக்ரா கலெக்டரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அங்கு நிலைமை அமைதியாக இருப்பதாக அவர் அறிக்கை தந்துள்ளார். எனவே இவ்விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நமது பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியே எங்களின் நோக்கம் என கூறியுள்ளார். இது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் இருந்தது. ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது அம்மாநில அதிகாரத்திற்குட்பட்டது. எனவே இது தொடர்பாக உ .பி., அரசை குறை கூற விரும்பவில்லை. சமீபகாலத்தில் மத மோதல்கள் குறைந்துள்ளது. இந்நேரத்தில் தவறாக நாட்டிற்கு தகவல்கள் பரப்பக்கூடாது. நாட்டில் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதே அரசின் முக்கிய குறிக்கோள் என்றும், மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால், இது தொடர்பாக உதவ மத்திய அரசு தயாராக இருக்கிறது.
ஜனநாயகத்திற்கு எதிர்கட்சியினர் மதிப்பளிப்பதில்லை. காந்தியின் கொள்கைகளை நாங்கள் மதிக்கிறோம். சுதந்திரம் கிடைத்த பின் காங்கிரசை கலைத்து விட வேண்டும் என காந்தி கூறினார். அதை காங்கிரசார் பின்பற்றவில்லை. மதச்சார்பின்மை என கூறிக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தங்கள் மத சடங்குகளை செய்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இதற்காக அவர்களை நான் குறை கூறவில்லை. எதிர்க்கட்சிகளைப் போன்று, மதச்சார்பின்மை என பேசிக் கொண்டு, மதங்களை ஆராதிப்பதற்கு பதிலாக, நாங்கள் எங்கள் நிலையை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறோம். நான் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலிருந்து வந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
எதிர்க்கட்சிகள் இந்து என்ற பெயரை நாங்கள் உபயோகிப்பதாக கூறுகின்றனர். இந்து என்ற பெயரை நாங்கள் ஆரம்பித்து வைக்கவில்லை. எங்களது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., பெயரில் கூட இந்து என்ற பெயர் இல்லை. நாட்டில் எத்தனையோ நிறுவனங்கள் இந்துஸ்தான் என்ற பெயரில் இயங்கி வருகின்றன. பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருக்கும் போது, இந்துஸ்தான் என்ற நாடு இருந்து விட்டு போகட்டுமே. இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.