மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறாத முக்கிய புள்ளிகள் யார்? யார்?

புதுடெல்லி,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து, நேற்று மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது.   57 மந்திரிகளை கொண்ட புதிய கூட்டணி மந்திரிசபைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மோடியை தொடர்ந்து 24 கேபினட் மந்திரிகள், 9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 24 ராஜாங்க மந்திரிகள் என மொத்தம் 57 மந்திரிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் ஜனாதிபதி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் இம்முறை இடம் பெறவில்லை. மத்திய அமைச்சரவையில் முதன்முறையாக அமித் ஷா இடம்பெற்றிருக்கிறார். மோடியின் முதல் 5 ஆண்டு கால ஆட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்த அமைச்சர்கள் சிலர் இம்முறை அமைச்சரவையில் இடம் பெறவில்லை. அவர்கள் யார்? என்பதை கீழ் காணலாம்.
அருண் ஜெட்லி
முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லிக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 18 மாதங்களாக கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் முக்கியப் புள்ளியாக இருந்த அருண் ஜெட்லி, அமைச்சரவையின் அதி முக்கிய முடிவுகளை வெளியிட்டவர் ஆவார்.   66வயதான அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதனால் இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யாத அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற சென்றிருந்தார்.
சுஷ்மா சுவராஜ்
மோடியின் முந்தைய ஆட்சியில் வெளியுறவுதுறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் இருந்தார். பாஜகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவராகவும் திகழும் சுஷ்மா சுவராஜ் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவர் பார்வையாளராக மட்டுமே கலந்து கொண்டார். 67-வயதாகும் சுஷ்மா சுவராஜ் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான மத்திய அமைச்சராக இருந்தார். சுஷ்மா சுவராஜும் தனது உடல் நிலையை காரணம் காட்டி தனக்கு பொறுப்பு வேண்டாம் என கூறியதாக சொல்லப்பட்டது.
ராஜ்யவர்தன் ரத்தோர்
 ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்றவரான ராஜ்யவர்தன் ரத்தோர், கடந்த ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். 49-வயதான அவருக்கு இந்த ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. முன்னாள் ராணுவ வீரரான ரத்தோர், சொந்த மாநிலமான ராஜஸ்தானில் போட்டியிட்டு 2-வது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜெயந்த் சின்கா
,மோடியின் முந்தைய  அமைச்சரவையில், விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் ஜெயந்த் சின்கா.  தற்போது அமைச்சர் பொறுப்பு வாங்கப்படவில்லை. முதலில் அவர் நிதித்துறை இணை அமைச்சராகத்தான் இருந்தார். பின்னர் அவருக்கு விமானப் போக்குவரத்து துறை வழங்கப்பட்டது. இவரது தந்தை பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.
ஜே.பி. நட்டா
ஜேபி நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக மோடியின் முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தார். இமாச்சல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஜேபி நட்டாவுக்கு இந்த முறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. பாஜகவின் அடுத்த தலைவராக இவர் தேர்வு செய்யப்படலாம் என பரவலாக ஊகங்கள் எழுவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

0 points
Upvote Downvote