அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவேசம்
அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அழிந்தே போவார்கள் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர்,

விருதுநகரில் நகர, கிழக்கு ஒன்றிய, மேற்கு ஒன்றியம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-

உள்ளாட்சி அமைப்புகளில் நாம் பதவியை பிடித்தால் தான் கட்சியையும், ஆட்சியையும் பலப்படுத்த முடியும். நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் 36 வார்டுகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். ஒரு பதவிக்கு ஒருவர் தான் போட்டியிட முடியும். எனவே நிர்வாகிகள் கலந்து பேசி தகுதியான ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

அ.தி.மு.க. பலம் பொருந்திய கட்சி. கிராமப்புறங்களிலும் நகர் புறங்களிலும் இளைஞர்கள் அ.தி.மு.க.வை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு கூடியுள்ள இளைஞர்களின் உதவியோடு அ.தி.மு.க.வில் உள்ள நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறவேண்டும். அ.தி.மு.க. நிர்வாகிகள் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டு அதனை நிறைவேற்றி வைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் ஆட்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். எந்த பதவிக்கும் போட்டியிட அவர்களுக்கு ஆட்கள் இல்லை. ஆனால் அ.தி.மு.க.வில் ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடுவதற்கு ஏராளமானோர் விருப்பமனு கொடுத்துள்ளனர். அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அழிந்தே போவார்கள். கட்சிக்கு புதிதாக யார் வந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் பதவிகள் வழங்கப்படும். அதே போல் நம்மிடம் இருந்து விலகி சென்றவர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தலுக்காக நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும். அப்போது தான் நாம் தேர்தலில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் ஜெயக்குமார் வறவேற்று பேசினார். சாத்தூர் எம்.எல்.ஏ.ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, நகர செயலாளர் முகம்மது நயினார், முன்னாள் யூனியன் தலைவர் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கலாநிதி, மற்றும் நகர நிர்வாகிகள், செயலாளர்கள் விருதுநகர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், துணை செயலாளர் கண்ணன், ஒன்றியத்தலைவர் பாலக்கிருஷ்ணன், பொருளாளர் சேகர், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கருப்பசாமி, செயலாளர் லட்சுமணன், ஜெயலலிதா பேரவை தலைவர் முருக முனியாண்டி, மகளிரணி தலைவர் அன்னபூரணம், செயலாளர் துளசிமணி, இளம் பெண்கள் பாசறை தலைவர் சங்கரேஸ்வரி, செயலாளர் ராமமூர்த்தி, ராமச்சந்திரன், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் சீனிவாசன் செயலாளர் கண்ணன், பொருளாளர் ராஜசேகர், இந்திரபிரபா, அசோக் தங்கராஜ், மாலா தங்கராஜ், சரஸ்வதி சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் அருணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அமைச்சருக்கு கிழக்கு, மேற்கு ஒன்றியங்களின் மூலம் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

YOUR REACTION?

Facebook Conversations