உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 299 விவசாயிகள் கைது
விளை நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்லடம் உள்பட 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 299 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்,

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு அரசு மின்தொடர்பு கழகமும் இணைந்து, தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் உள்பட 13 மாவட்டங்களில், உயர்மின் கோபுரங்களை அமைத்து வருகிறது. இந்த உயர்மின் கோபுரங்கள் அனைத்தும் விளைநிலங்களில் அமைக்கப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு பதிலாக சாலையின் ஓரங்களில் கேபிள்களை புதைத்து, அதன் மூலமாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள, அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட, இந்திய தந்தி சட்டம் 1885-ஐ நீக்கவேண்டும். நிலத்தை இழக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் 2013-ம் ஆண்டு புதிய நிலம் எடுப்புச் சட்டத்தின்படி, நிலத்தின் முழு மதிப்பிழப்பை சந்தை விலையில் நிர்ணயம் செய்து, நான்கு மடங்கு தொகை வழங்கிட வேண்டும். ஏற்கனவே உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு மின்சாரம் சென்று கொண்டிருக்கும் திட்டங்களுக்கு, கோபுரம் அமைத்துள்ள இடத்திற்கும், மின்கம்பி செல்லும் இடத்திற்கும் மாத வாடகை நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும், இந்த பிரச்சினை தொடர்பாக விவசாய சங்க கூட்டியக்கத்துடன் முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 13 மாவட்டங்களில் 18-ந் தேதி (நேற்று) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்க கூட்டியக்கம் அறிவித்து இருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம் பகுதியிலும் சாலை மறியல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க வில்லை. ஆனாலும் தடையை மீறி சாலை மறியல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள பல்லடம் பஸ் நிலையம் முன்பு விவசாயிகள், விவசாய சங்கத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் நேற்று காலை திரண்டனர். பின்னர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் வாவிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பார்த்தசாரதி, பாசனசபை தலைவர் கோபால், சண்முகம், காங்கிரஸ் ஈஸ்வரமூர்த்தி, கணேசன், ம.தி.மு.க. மணி, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சத்தியமூர்த்தி, சோமசுந்தரம் மற்றும் 8 பெண்கள் உள்பட 92 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் 92 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாராபுரத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அண்ணாசிலை அருகே சாலை மறியல் நடந்தது. இந்த போராட்டத்தில், விவசாய சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் முத்துக்கண்ணன், முருகானந்தம், சிவக்குமார், கனகராஜ், ரகுபதி, தடாஆறுமுகம், முத்தமிழ்வேந்தன் மற்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கம் உள்பட பல அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 92 பேரை போலீசார் கைது செய்தனர்.

காங்கேயம் பஸ்நிலையம் முன்பு ரவுண்டானாவில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் முத்துவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.குமார், புரட்சிகர இளைஞர் முன்னணியின் பொறுப்பாளர் கவி, போராட்ட குழுவின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஈசன், தமிழ்மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் பி.சேதுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

அதை தொடர்ந்து கோஷம் போட்டவாறு பஸ்நிலையத்தில் இருந்து நடந்து சென்று ரவுண்டானாவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். இதையடுத்து காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.செல்வம் தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதில் 15 பெண்கள் உள்பட மொத்தம் 80 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதே போல் கணியூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மடத்துக்குளம் -காரத்தொழுவு சாலையில் அமர்ந்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க தாலுகாசெயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட கனகராஜ், சிவராஜ், காளிமுத்து, கதிர்வேல் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதன்படி பல்லடம், தாராபுரம், காங்கேயம் மற்றும் மடத்துக்குளத்தில் மொத்தம் 299 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

YOUR REACTION?

Facebook Conversations