திருவேங்கடம் அருகே, வி‌‌ஷம் குடித்த பெண் சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திருவேங்கடம் அருகே வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவேங்கடம்,

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறை வடக்கு தெருவை சேர்ந்தவர் கோபாலசாமி என்பவருடைய மனைவி லட்சுமியம்மாள் (வயது 55). இவர் தனது உறவினரான ரெங்கலட்சுமி என்பவரது வீட்டில் வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மைப்பாறை பஞ்சாயத்து செயலராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ரெங்கலட்சுமி குடும்பத்தினருக்கும், செல்வராஜ் குடும்பத்தினருக்கும் இடையே இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பாக கடந்த 11-ந் தேதி லட்சுமியம்மாளுக்கும், செல்வராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது செல்வராஜ், அவரது மனைவி சரண்யா (32), உறவினர்களான ஜெயபாரதி (49), செல்லச்சாமி (53) ஆகியோர் சேர்ந்து லட்சுமியம்மாளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமியம்மாள் வி‌‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கும், பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் செல்வராஜ் உள்பட 4 பேர் மீது திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமியம்மாள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செல்வராஜ் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி லட்சுமியம்மாளின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மருத்துவமனை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

YOUR REACTION?

Facebook Conversations