சின்னசேலம் அருகே, ரெயில் முன்பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை
தாய் வீட்டுக்கு சென்ற மனைவி தன்னுடன் வராததால் புதுமாப்பிள்ளை சின்னசேலம் அருகே ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது

சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயப்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன் மகன் தனுஷ்கோடி(வயது 20). என்ஜினீயரான இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முகநூல் மூலம் நாமக்கலை சேர்ந்த பென்னி(18) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இதையடுத்து தனுஷ்கோடி கடந்த மாதம் நாமக்கல் சென்று, அங்குள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பென்னியை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அவர் தனது காதல் மனைவியை சொந்த ஊருக்கு அழைத்து வந்து வசித்து வந்தார்.

இந்தநிலையில் பென்னி தனது கணவருடன் கடந்த வாரம் நாமக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது பென்னிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஓரிரு நாட்கள் கழித்து தனுஷ்கோடி தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். இதையறிந்த பென்னியின் பெற்றோர் தங்களது மகளுக்கு உடல்நலம் சீரானதும் கச்சிராயப்பாளையத்துக்கு அனுப்பி வைப்பதாக கூறினர். அதேபோல் பென்னியும் நீங்கள் சொந்த ஊருக்கு செல்லுங்கள் நான் ஓரிரு நாட்களில் அங்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

காதல் மனைவி தன்னுடன் வரவில்லையே என்ற ஏக்கத்தில் தனுஷ்கோடி அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் மாலை சின்னசேலத்துக்கு வந்தார். பின்னர் அவர் தனது தந்தை காளியப்பனை செல்போனில் தொடர்பு கொண்டு பென்னி தன்னுடன் வரவில்லை. அவர்களது பெற்றோர் எங்களை பிரித்து விடுவார்களோ? என்று தனக்கு சந்தேகமாக உள்ளது. ஆகவே பென்னி இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும், நான் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த காளியப்பன் தனது உறவினர்களுடன் சின்னசேலம், கச்சிராயப்பாளையம் பகுதியில் தேடிவந்தனர்.

இந்த நிலையில் சின்னசேலம் அம்மையகரம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் தனுஷ்கோடி ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக நேற்று காலை சேலம் ரெயில்வே போலீசாருக்கும், காளியப்பனுக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். அப்போது, நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரெயில் முன்பு பாய்ந்து தனுஷ்கோடி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காதல் மனைவி தன்னுடன் வரவில்லையே என்ற விரக்தியில் புதுமாப்பிள்ளை ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

YOUR REACTION?

Facebook Conversations