கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை, நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்
வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி,

நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் ரவிகுமார், தொகுதி செயலாளர் ராஜே‌‌ஷ் கண்ணன் உள்ளிட்டவர்கள் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், கோவில்பட்டி நகரசபை 32-வது வார்டில் 2-வது குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பாரதிநகர் மேட்டுத்தெரு 4-வது தெருவில் உள்ள ஓடைத்தெருவில் உள்ள வீடுகளுக்கு 2-வது குடிநீர் திட்டத்தில் இணைப்பு வழங்க மறுக்கப்படுகிறது.

மேலும் பாரதிநகர் 1, 2, 3, 4-வது தெருக்களில் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடாமல் சென்று விட்டனர். இதனால் அங்கு குண்டும் குழியுமான சாலையில் மண் திட்டுகளாகவும், சேறும் சகதியுமாகவும் உள்ளது.

மேலும் குழாய் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டும்போது, ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்தால், அதனை சீரமைக்க மறுக்கின்றனர். பாரதிநகர் 4-வது தெருவில் டார்வின் பள்ளி அருகில் சேதம் அடைந்த குடிநீர் குழாயை சீரமைக்காமல் 8 மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர்.

எனவே கோவில்பட்டி பாரதி நகரில் அனைத்து தெருக்களிலும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளையும், சேதமடைந்த குடிநீர் குழாய்களையும் புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதேபோன்று ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராஜசேகர், நகர இளைஞர் அணி அமைப்பாளர் லவராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இந்திரன் உள்ளிட்டவர்கள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இதில் கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம், கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை பகுதி விவசாயிகள் கலந்து கொள்வதற்கு நீண்ட தூரம் பயணித்து தூத்துக்குடிக்கு வர வேண்டி உள்ளது. எனவே கோவில்பட்டியிலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

YOUR REACTION?

Facebook Conversations