வடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் – காயத்ரி ரகுராம் சாடல்

‘பிரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலு தலையில் விழும் சுத்தியல் நகைச்சுவையை மையமாக வைத்து ‘பிரே பார் நேசமணி ஹேஷ்டேக்’ உலக அளவில் 2 நாட்களாக டிரெண்டாகி அதிர வைத்தது. வடிவேலு படத்துடன் ஏராளமான மீம்ஸ்கள் பகிரப்பட்டன. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்த சம்பவங்களை வைத்து நேசமணி இட்லி சாப்பிட்டார், கலக்கி சாப்பிட்டார் என்ற வாசகங்களை பகிர்ந்தனர்.

வடிவேலு தலையில் சுத்தியல் வீசிய ரமேஷ் கண்ணாவை போலீசார் கைது செய்து இழுத்து செல்வதுபோன்ற மீம்ஸ்களும் பரவின. டுவிட்டரில் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் நேசமணி முதல் இடம் பிடித்தது. உலக அளவில் 3–ம் இடத்தை பிடித்தது. வெளிநாட்டு பத்திரிகைகள் நேசமணி யார்? அவருக்காக ஏன் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பின.

நேசமணி வைரலானதன் விளைவாக மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றது சம்பந்தமான ‘மோடி சர்கார் 2’ என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் முதல் இடத்தை பிடிக்காமல் போனது.

நேசமணி டிரெண்டிங் ஆனதை நடிகை காயத்ரி ரகுராம் கண்டித்தார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–

‘‘நேசமணி ஹேஷ்டேக்கை தேவையில்லாமல் டிரெண்டிங் செய்து முட்டாள்தனத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இது பைத்தியக்காரத்தனம். ஒரு நல்ல நகைச்சுவையை தேவையில்லாமல் ஹேஷ்டேக்காக மாற்றி மீம்ஸ்களாக பதிவிடுகிறார்கள். ஒருவேளை மோடிக்கு எதிராக இதை செய்வதாக இருந்தால் அது மோசமான சிந்தனை.

உலக மக்கள் நமக்கு மூளை இல்லை என்று நினைப்பார்கள். இந்த வகையான போலியான போராளிகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது.’’ இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் காண்டிராக்டர் நேசமணி பெயரில் படம் எடுக்க தலைப்பை பதிவு செய்துள்ளனர்.

What do you think?

0 points
Upvote Downvote